|
ஏற்றருள்வாய் ரப்பனா!
1. ஆக்கல் அழித்தல் காத்தல் மூன்றும்
உனது கிருபை ரப்பனா
அஹ்மது நபியின் வழியில் நடக்க
ஆக்கம் தருவாய் ரப்பனா
2. அனைத்து முஸ்லீம் பாவம் பொறுத்து
அருளை பொழிவாய் ரப்பனா
அஹ்மது நபியின் உம்மத்தார்க்கு
அன்பை தருவாய் ரப்பனா
3. முஃமீன் முஸ்லீம் அனைவோர் பிழையை
மன்னித்தருள்வாய் ரப்பனா
முஹம்மது நபியின் உம்மத்தார்க்கு
மேன்மை தருவாய் ரப்பனா
4. காஸிம் நபியின் உம்மத்தார்க்கு
கருணை புரிவாய் ரப்பனா
கலிமா ஓதி ரூஹு பிரிய
கிருபை செய்வாய் ரப்பனா
5. கண்கள் விழித்து வணங்க வந்தோம்
கருணை செய்வாய் ரப்பனா
கருணை செய்வாய் என்று நம்பி
கரங்கள் ஏந்தினோம் ரப்பனா
6. உலக மாயையில் மயக்கம் கொண்டு
உன்னை மறந்தோம் ரப்பனா
உனது உணவை தின்று வளர்ந்து
உன் நன்றி மறந்தோம் ரப்பனா
7. உனது முன்னால் எங்கள் கைகளை
உயர்த்துகின்றோம் ரப்பனா
ஒன்றுமில்லை என்று சொல்லி
ஒதுக்கிடாதே ரப்பனா
8. நட்சத்திரங்கள் வணங்கும் இந்த
நல்ல இரவில் ரப்பனா
நல்ல அமல்கள் புரிந்து உன்னை
நம்பி வந்தோம் ரப்பனா
9. வான மலக்குகள் வணங்கும் இந்த
வரிசை இரவினில் ரப்பனா
தீனை மறந்த பாவச் சுமையை
தூக்கி வந்தோம் ரப்பனா
10. பலாய் முஸீபத் வந்திடாமல்
பாதுகாப்பாய் ரப்பனா
கழா கத்ரென்னும் நல்ல விதியை
கனிந்து தருவாய் ரப்பனா
11. அழகு நிறைந்த அரண்மனைகள்
அடைத்து கிடக்குது ரப்பனா
அநாதையாக வந்து நின்று
அழுகின்றோமே ரப்பனா
12. எதீமாக வந்து நின்றோம்
எங்கு செல்வோம் ரப்பனா
ஏழை நாங்கள் வழியில்லாமல்
ஏங்குகின்றோம் ரப்பனா
13. ஏங்கும் நெஞ்சை தாங்கும் நெஞ்சாய்
இயங்க செய்வாய் ரப்பனா
வாங்கும் கரத்தை வழங்கும் கரமாய்
ஓங்க செய்வாய் ரப்பனா
14. எங்கள் உடலை அழித்திடாமல்
ஏற்றுக் கொள்வாய் ரப்பனா
இருள் நிறைந்த எங்கள் கப்ரை
இலங்கச் செய்வாய் ரப்பனா
15. காகம் பருந்து தின்றிடாமல்
காத்தருள்வாய் ரப்பனா
நாகம் தேள்கள் தீண்டிடாமல்
நாளும் காப்பாய் ரப்பனா
16. சூரியன் சந்திரன் விண்மீன் உனக்கு
சுஜுது செய்யுதே ரப்பனா
சுஜுது செய்யும் முகத்தை நெருப்பால்
சிதைத்திடாதே ரப்பனா
17. ஏழு கடலையும் சாயமாக
மாற்றினாலும் ரப்பனா
எழுது கோலாய் மரங்களெல்லாம்
ஆகினாலும் ரப்பனா
18. உனது புகழை எழுதி முடிக்க
எவரால் முடியும் ரப்பனா
கல்லும் முல்லும் உனது பெயரை
கணிந்து சொல்லுதே ரப்பனா
19. எங்கள் நாவுகள் எமது குறைகளை
எடுத்துக் கூறுது ரப்பனா
அடியார் செய்த பாவக்கறைகளை
அருளாய் மாற்றிடு ரப்பனா
20. அறிந்து செய்த பாவம் நினைத்து
அழுகின்றோமே ரப்பனா
தெரிந்து செய்த பாவம் எண்ணி
தேம்புகின்றோம் ரப்பனா
21. கண்கள் எல்லாம் பாவச் செயலால்
கலக்கம் கொண்டது ரப்பனா
காலால் நடந்த பாவம் நினைத்து
கதறுகின்றோம் ரப்பனா
22. காதால் கேட்ட பாவம் நினைத்து
கலங்குகின்றோம் ரப்பனா
நாவால் நிகழ்ந்த பாவம் எண்ணி
நடுங்கின்றோம் ரப்பனா
23. பகலில் செய்த பாவம் நினைத்து
பதறுகின்றோம் ரப்பனா
இரவில் செய்த பாவம் எண்ணி
இதயம் துடிக்குதே ரப்பனா
24. பலகை லவ்ஹில் எங்கள் பெயரை
பதியும் நேரத்தில் ரப்பனா
பாவிகளின் பெயரில் இணைத்து
பதிந்திடாதே ரப்பனா
25. உம்முல் கிதாபில் எங்கள் பெயரை
எழுதும் நேரத்தில் ரப்பனா
உண்மை முஃமீன் முஸ்லீமாக
எழுதி வைத்திடு ரப்பனா
26. முஃமீன் முஸ்லீம் அனைவர் பிழையை
மன்னித்தருள்வாய் ரப்பனா
பெற்றோர் பிழையை உற்றார் பிழையை
பொறுத்தருள்வாய் ரப்பனா
27. அழுது அழுது எங்கள் கண்கள்
அயர்ந்து போனது ரப்பனா
தொழுது தொழுது உனது பூமியை
தூய்மையாக்கினோம் ரப்பனா
28. எறும்பின் மீது நபி சுலைமான்
இரக்கம் காட்டினார் ரப்பனா
அரும்பு மனிதன் ஓதும் ஓசை
அர்ஷில் ஒலிக்காதோ ரப்பனா
29. ஹரம் சென்று தவாஃபு செய்ய
உரம் தருவாய் ரப்பனா
அறம் செய்து திறனாய் வாழ
வரம் தருவாய் ரப்பனா
30. அரஃபாத் சென்று ஹஜ் செய்ய
சிறப்பாய் அனுப்பிடு ரப்பனா
ஆரிஃபீன்களின் கூட்டத்தோடு
ஒன்று சேர்த்திடு ரப்பனா
31. ஹாதிம் நபியின் கப்ரை காண
கண்கள் தேடுது ரப்பனா
மதீனா சென்று ஜியாரத் செய்யும்
மாண்பை தருவாய் ரப்பனா
32. நபிகள் நாதரை நேரில் காண
நஸீபை தருவாய் ரப்பனா
நரக நெருப்பில் நாங்கள் வீழ
நாடிடாதே ரப்பனா
33. மலைகள் போன்ற பாவம் செய்து
மதியை இழந்தோம் ரப்பனா
நிலையில்லாத வாழ்வை நம்பி
வலையில் வீழ்ந்தோம் ரப்பனா
34. பெரிய பாவம் சிறிய பாவம்
பொறுத்தருள்வாய் ரப்பனா
மாண்ட மனிதரை எழுப்பும் நேரத்தில்
மன்னித்தருள்வாய் ரப்பனா
35. நல்ல ஆயுளை நல்ல செல்வத்தை
நல்கி விடுவாய் ரப்பனா
நாங்கள் வாழும் வாழ்க்கை தன்னை
பொருந்திக் கொள்வாய் ரப்பனா
36. தாய் தகப்பரின் பிழைகள் பொறுத்து
தயவு காட்டிடு ரப்பனா
நோய் நொடிகள் அணுகிடாமல்
நீயே காத்தருள் ரப்பனா
37. மனித கண்கள் உன்னை மறந்து
மயக்கம் கொண்டது ரப்பனா
புனித மிக்க இந்நல்ல இரவில்
புகழ வந்தோம் ரப்பனா
38. சதிகள் செய்யும் ஷைத்தானை வெல்ல
மதியை தருவாய் ரப்பனா
நதிகள் பாயும் சுவனம் செல்ல
நல்லருள் புரிவாய் ரப்பனா
39. கௌதுல் அஃழம் பாதம் சுமக்க
கிருபை செய்வாய் ரப்பனா
கவ்மின் காவலர் காதிர் வலியின்
காட்சி தருவாய் ரப்பனா
40. எங்கள் இறைவா! கெஞ்சும் இந்த
பாவி வேண்டலை ரப்பனா
ஏற்றருள்வாய் ஏற்றருள்வாய்
ஏற்றருள்வாய் ரப்பனா
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|